உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் ரஷ்யா–ஈரான் முயற்சி – பிரித்தானியா எச்சரிக்கை
ரஷ்யாவும் ஈரானும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட முயற்சிப்பதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கான தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்து, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு நாடுகளும் உலக பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் கூறினார்.
இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்படும் என நேற்று சபதம் செய்தார்.
இதேவேளை, அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான சில பொருளாதாரத் தடைகளை தற்காலிகமாக தளர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இரு நாடுகளும் தங்கள் அரசியல் அணுகுமுறைகளிலும் தந்திரோபாயங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் கூப்பர் தெரிவித்தார்.
மேலும், இந்த இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து உலகப் பொருளாதாரத்தில் அழுத்தத்தை உருவாக்க முயற்சிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் தடைகள் தொடர்பான சமீபத்திய அறிவிப்பை நேரடியாக விமர்சிக்காமல், அது “குறிப்பிட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை” என கூப்பர் குறிப்பிட்டார்.





