சர்வதேச அங்கீகாரம் தேடும் சோமாலிலாந்து – அமெரிக்காவுக்கு கனிம வளங்களும் இராணுவ தளங்களும் வழங்க தயார் என அறிவிப்பு
சோமாலியாவிலிருந்து பிரிந்து செயல்படும் சோமாலிலாந்து, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கும் நிலையில், தனது கனிம வளங்கள் மற்றும் இராணுவ தளங்களை அமெரிக்காவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலக அமைச்சர் காதர் ஹுசைன் அப்தி, AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டுவோம் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார்.
1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுயாட்சியை அறிவித்த சோமாலிலாந்து, இதுவரை பரவலான சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை. கடந்த டிசம்பரில் அந்தப் பிராந்தியத்தை இஸ்ரேலே முதன்முதலாக அங்கீகரித்தது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை சோமாலியா கடுமையாக எதிர்த்து, தனது பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகக் கண்டித்துள்ளது. பெரும்பாலான ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளும் சோமாலியாவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளன.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சோமாலிலாந்து தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது, தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலிலாந்து, ஏடன் வளைகுடா அருகே முக்கிய புவியியல் இடத்தில் அமைந்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்தப் பிராந்தியத்தில் லித்தியம், தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்தும் சுயாதீன ஆய்வுகள் இதுவரை வெளியாகவில்லை.





