சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள்: மஹிந்த அணி போர்க்கொடி!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த Indika Anuruddha இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார்.
“ ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும் FCID , நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் CID ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.
ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் ஓர் அங்கம்தான் இது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் தமது இயலாமையை மூடி மறைத்துக்கொள்வதற்காகவே ராஜபக்சக்களை இவ்வாறு குறிவைக்கின்றது.
படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகின்றது.
இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின்கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.
இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால் வடக்கில் நேற்று இனவாதம் தூண்டப்பட்டது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அதனை செயலில் காட்ட வேண்டும்.” எனவும் இந்திக்க அனுருந்த மேலும் குறிப்பிட்டார்.





