மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களால் போராட்டம்
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து இன்று (05) இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவானோர் மட்டக்களப்பு ,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட காலமாக கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழில்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தாங்கள் நீண்ட காலமாக கடற்றொழிலில் ஈடுபட்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரம் மூலம் வலைகள் இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.





