“இலங்கையில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்”
இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கடிதத்தை கையளித்தார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளராகப் பணியாற்றிய திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.
இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி ஜயரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.





