கிழக்கு ஏஜியன் கடற்பரப்பில் படகுடன் மோதிய ரோந்து கப்பல் – 14 பேர் பலி!
கிழக்கு ஏஜியன் தீவான சியோஸுக்கு (eastern Aegean island) அருகில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகும் கிரேக்க கடலோர காவல்படையின் ரோந்து கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24 புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக சியோஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் வேகப் படகில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், பலர் காணாமல்போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரோந்து படகுகள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் டைவர்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.





