நூதனமான முறையில் கடத்தி வரப்பட்டது
துபாய், கத்தார், இலங்கை நாடுகளில் இருந்து, சென்னைக்கு 8 விமானங்களில், நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.29 கோடி மதிப்புடைய 4.28 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, 2 இலங்கை பெண்கள் உட்பட,8 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.
இலங்கை, துபாய், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம், சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், மற்றும் பெண் சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து, கடந்த 2 தினங்களாக, சென்னை விமான நிலையத்தில் இரவு பகலாக சோதனை நடத்தினர்.
அப்போது துபாய், இலங்கை, கத்தார் நாட்டு தலைநகர் தோகா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த, ஏர் இந்தியா, ஸ்ரீலங்கன், எம ரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 8 பயணிகள் விமானங்களில் வந்த, சுமார் 20 க்கும் மேற்பட்ட பயணிகளை சந்தேகத்தில் நிறுத்தி சோதனை இட்டனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள், இலங்கையைச் சேர்ந்த மற்றொரு ஆண் பயணி, மேலும் சென்னை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 5 ஆண் பயணிகள், மொத்தம் எட்டு பயணிகளிடம் இருந்து ரூ. 2.29 கோடி மதிப்புடைய 4.28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் இலங்கைப் பெண் பயணிகள் தங்கள் ஆடைகளில் தங்கப் பசைகளையும், தங்க செயின்களையும் மறைத்து வைத்திருந்தனர். அதைப்போல் மற்ற ஆண் பயணிகள் சிலர், நூதனமான முறையில், கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது போலவும்.
அதற்கு கட்டுகள் போட்டு பேண்ட் டெய்ட் ஒட்டியுள்ளது போலவும் ஒட்டிக்கொண்டு, அதனுள் தங்க பசையான ஸ்டிக்கர்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இவர்கள் தனித்தனி விமானங்களில், வேறு வேறு நாடுகளில் இருந்து வந்தாலும்.
அனைவரும் ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்தக் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்படும் ஆசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.