செய்தி விளையாட்டு

15 வருடத்தில் ரோஹித்தை இப்படி பார்த்து இல்லை… கண்ணீர் கதைக்கான காரணத்தை பகிர்ந்த விராட்

நடந்து முடிந்து 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பையை (ICC T20 World Cup 2024) வென்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று காலை நாடு திரும்பியது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படாஸ் நகரில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பால் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புறப்பட வேண்டிய இந்திய அணி அங்கிருந்து புதன்கிழமை அன்றே புறப்பட்டது.

இந்திய நேரப்படி நேற்று காலை 6.20 மணிக்கு ஏர் இந்தியாவின் தனி சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி (Team India) டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையத்திலும் சரி, இந்திய அணி தங்கிய நட்சத்திர ஹோட்டலான டெல்லி ஐடிசி மயூராவிற்கு வெளியேவும் சரி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களை கொண்டாட நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு, கோஷங்களை எழுப்பி தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடியை அவரது டெல்லி இல்லத்தில் நேற்று மதியம் சந்தித்தது. வீரர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனித் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், குழுவாக நின்று கோப்பையுடனும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிரதமரை சந்தித்த பிற்பாடு இந்திய அணி உடனே மும்பை புறப்பட்டது. மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் நின்றுகொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் கோப்பையுடன் மாபெரும் பேரணியாக வந்தனர்.

இந்திய அணியின் இந்த மாபெரும் ரோட் ஷோ மும்பை மரைன் டிரைவில் (Team India Roadshow) தொடங்கி வான்கடே மைதானம் வரை நீண்டது. இந்திய வீரர்கள் வந்த அந்த பேருந்து மக்கள் வெள்ளத்தில் மெதுமெதுவாக மிதந்தே மைதானத்தை வந்தடைந்தது. பேருந்தில் கோப்பையுடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆக்ரோஷமாக இணைந்து கொண்டாடிய தருணம் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்பட அனைவரும் அந்த ஜனத்திரளின் மத்தியில் தங்களின் வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர் எனலாம். மழை, வெக்கை என எதுவும் பாராமல் மரங்களில் தொங்கிக் கொண்டும், கட்டடங்களில் நின்றுகொண்டும் இந்திய வீரர்களின் அந்த வெற்றிப் பேரணியை ரசிகர்களும் கண்டுகளித்து, தங்களின் வீரர்களை கொண்டாடித் தீர்த்தனர்.

ரோட் ஷோவை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா (Team India Felicitation Ceremony) நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்திய அணிக்கு பிசிசிஐ (BCCI) அறிவித்த ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வீரர்கள் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். மேலும், ரசிகர்களுக்கு பந்துகளையும் பரிசாக வீசினர். சில ராசிக்கார ரசிகர்கள் வீரர்களிடம் கையெழுத்தும், செல்ஃபியும் பெற்றுக்கொண்டனர். வீரர்கள் மைதானத்தை வலம் வந்தபோது, விராட் கோலி, பாண்டியா உள்ளிட்ட பலரும் ஏ.ஆர். ரஹ்மான் இந்தியில் இசையமைத்த ‘வந்தே மாதரம்’ பாடலை பாடியது ரசிகர்களை Goosebumps தருமணமாக அமைந்தது.

முன்னதாக இந்திய அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் பேசினர். இதில் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்போது, இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு தங்களுக்கு இருந்தது போலவே ரசிகர்களுக்கும் அதே துடிப்பு இருந்துள்ளதாகவும், அதைதான் இந்த ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கூட்டம் வெளிக்காட்டிகிறது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த டி20 உலகக் கோப்பை நாட்டில் உள்ள அனைவருக்குமானது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விராட் கோலி (Virat Kohli),”கடந்த 15 வருடங்களில் ரோஹித் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததே இல்லை, இதுதான் முதல்முறை. இறுதிப்போட்டி வெற்றிக்கு பிறகு கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் படிகளில் ஏற்றிச் செல்லும்போது படிகளில் ஏறும்போது, ரோஹித் அழுது கொண்டிருந்தார், நானும் அழுது கொண்டிருந்தேன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பாரத்தை இந்திய அணிக்காக ரோஹித்தும் நானும் சுமந்துள்ளோம். அந்த வகையில் கோப்பையை வென்று, அதனை மீண்டும் வான்கடே மைதானத்திற்கு கொண்டு வருவதை விட சிறந்தது வேறில்லை என நினைக்கிறேன்” என்றார். 2011ஆம் ஆண்டில் விராட் கோலி இளம் வீரராக அணியில் இருந்தபோது இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றியதும் இதே வான்கடே மைதானத்தில்தான். அப்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் பாரத்தை சுமந்தால் அன்று வீரர்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கரை மைதானம் முழுக்க சுற்றி வந்த நிகழ்வு இன்றும் யாராலும் மறக்க முடியாது.

மேலும் வான்கடேவில் உலகக் கோப்பையை வென்ற தருணத்தை நினைவுக்கூர்ந்த விராட் கோலி, அன்று பல சீனியர் வீரர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். அப்போது அந்த உணர்வை சரியாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அந்த உணர்வு புரிகிறது என்றார். தொடர்ந்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் வேடிக்கையாக,”நாங்கள் பும்ராவை தேசிய பொக்கிஷமாக அறிவிக்கக்கூறி, பலரிடம் இருந்து கையெழுத்து வாங்க உள்ளோம். அதில் நீங்கள் கையெழுத்திடுவீர்களா…?” என கேட்டார்.

அதற்கு விராட் கோலி,”நான் உடனே கையெழுத்துவிடுவேன்… பும்ரா ஒரு தலைமுறையில் உருவாகக் கூடிய மிகவும் அரிதான வீரர் ஆவார். அவர் எங்களுக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். விராட் கோலி சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி