தென்கொரியாவில் களமிறங்கும் ட்ரம்ப் – வடகொரியாவின் செயலால் பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட முக்கியமான உலகத் தலைவர்கள் அடுத்த வாரம் தென்கொரியாவில் ஒன்றுகூடவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடைபெறுகின்றது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய சில முக்கிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டை முன்னிட்டு தென்கொரியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது.
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என்று தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தென்கொரியாவில் வைத்து சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பில் ஈடுபடவுள்ளமையும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியுடனான நேரடி சந்திப்பை ட்ரம்ப் இரத்து செய்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றமை முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.