இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியளவு வெப்பம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் வட மத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு , மொனராகலை மாவட்டங்களுக்கும் அதிக வெப்பம் தொடர்பான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியளவு வெப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன், அதிகளவு நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடும் வெப்பம் , வறட்சி நிலவுவதால் கண் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு சுகாதார பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெப்பமான வானிலை காரணமாக கண் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,82,000 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியினால் இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தின் பிரதான ஏரியான பதலகொட குளம் தற்போது வற்றி காணப்படுகிறது.
குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள நெற்செய்கைகளுக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஹிங்குராங்கொட பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மின்னேரியா ரொட்டவெவ, கதுருகஸ்வெவ ஆகிய பகுதிகளும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.