பிரித்தானியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் – M15 எச்சரிக்கை!
பிரித்தானியாவில் உள்ள யூதர்களுக்கும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து M15 எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அதனுடன் அரசு சார்ந்த அச்சுறுத்தல்களும் நீடிப்பதாகவும் அந்தப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் சில காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களில் படிப்படியான அதிகரிப்பை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளது.
அதேநேரம் யூத-எதிர்ப்பைக் கையாள்வதற்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.
லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு மற்றும் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் கொலைக்குப் பிறகு, நவம்பர் 2021-இல் தான் கடைசியாக பயங்கரவாத அச்சுறுத்தல் இந்த அளவிற்கு அதிகமாக இருந்தது.
பின்னர் அது பிப்ரவரி 2022-இல் ‘கணிசமான’ நிலைக்குக் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.





