‘பொலிஸாரின் விசாரணை வேட்டை’யை எதிர்த்து யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று (19) இப் போராட்டம் இடம்பெறுகின்றது.
“ மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து , மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் .” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதற்கமைய கடந்த 10ஆம் திகதி , பொலிஸ் வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து , துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் , துணைவேந்தர் , பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்றவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





