பல்கலைக்கழகங்களில் இணையவழியில் விரிவுரை: பின்னணி என்ன?
பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் (ஒன்லைன்) முறையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்கள் தற்போது சாத்தியமான இடங்களில் புதன்கிழமைகளில் ‘வீட்டிலிருந்தே பணிபுரிதல்’ முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
அதேவேளை, அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் முன்னெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமில்லை என்பதால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் சில நேரடி அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
பல்கலைக்கழக ஊழியர்கள் முடிந்தவரை ஒன்றிணைந்து வாகனங்களைப் பகிர்ந்து கொண்டு பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான, பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் போன்ற நடைமுறைப் பயிற்சிகள் அவசியமான பாடப்பிரிவுகள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே சில விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
கோட்பாட்டு ரீதியான விரிவுரைகள் மெய்நிகர் முறையில் நடத்தப்படும். நடைமுறைப் பயிற்சிகள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.
உதாரணமாக, ஒரு தொகுதி மாணவர்கள் ஒரு வாரம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமது செய்முறைப் பயிற்சிகளை முடித்து விட்டுத் திரும்பலாம்.
தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால், கொவிட்-19 தொற்று பரவல் காலத்தைப் போலவே மாணவர்கள் வீடுகளிலிருந்தே கற்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.
இருப்பினும், இது குறித்த இறுதி தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வித் தொடர்ச்சியைப் பேணுவதே எமது முதன்மை நோக்கம் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே Professor Wasantha Liyanage தெரிவித்துள்ளார்.





