புலிகளின் சித்தாந்தம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவில்லை: புலம்புகிறது மஹிந்த அணி!
“இலங்கையில் புலி பயங்கரவாதம் பௌதீக ரீதியாக அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் பின்னணியிலுள்ள சித்தாந்தம் சர்வதேச ரீதியில் இன்னும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன Sanjeeva Edirimanna தெரிவித்த்தார்.
நாமல் ராஜபக்ச லண்டனில் முன்னெடுக்கப்படவிருந்த கலந்துரையாடல்கள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“உலகின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான உரையாடல் எனும் உன்னதக் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்தப் பல்கலைக்கழகங்கள் இச்சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தன.
எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண்பதற்கான சிறந்த மேடையாகவே இதனை நாம் கருதினோம்.
இருப்பினும், புலம்பெயர் அமைப்புகளின் கடும் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இறுதி நேரத்தில் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களால் இரத்து செய்யப்பட்டது.
இந்தச் செயல்முறையை உன்னிப்பாக அவதானிக்கும் போது மூன்று முக்கிய அரசியல் உண்மைகள் புலப்படுகின்றன.
நாமல் ராஜபக்ச கட்டியெழுப்பியுள்ள அரசியல் ஆளுமைக்கும் அடையாளத்திற்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதை இந்த அழைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், அதன் சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எமது அரசியல் முகாம் கொண்டுள்ள தேசியவாத கொள்கைகளுக்கு எதிராக எழும் இத்தகைய எதிர்ப்புகளை, எமது அரசியல் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.”- எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.





