நேட்டோவில் இருந்து பின்வாங்கும் அமெரிக்கா : மழுங்கும் செயற்பாடுகள்!
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்பான நேட்டோவின் தலைமைப் பொறுப்பிலிருந்து அமெரிக்கா பின்வாங்கி, ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பை செய்ய வேண்டும் என நேட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ள கூற்றை ஐரோப்பிய தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நேற்று (12.02) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ( Pete Hegseth) கலந்து கொள்ளவில்லை.
அதேபோல் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் கடைசி கூட்டத்தை வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தவறவிட்டிருந்தார்.
அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்கள் இவ்வாறான முக்கிய கூட்டங்களை தவறவிடுவது அரிது. தொடர்ச்சியாக இரண்டு கூட்டங்களை அமெரிக்கா தவறவிட்டுள்ளது பிற அதிகாரிகள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது.
முன்னதாக நேட்டோ கூட்டணிக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா தனது துருப்புகளை அதிகமாக வைத்திருந்தது. பெரும்பாலான ஆதிக்கத்தை அல்லது கட்டுப்பாட்டை கொண்டிருந்தது. ஆனால் தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அதன் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன.





