தெரு நாய்கள் தாக்கியதால் பலியான 7 வயது சிறுவன் ; அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டம், பிலாரியில் தந்தை மற்றும் தாய்க்கு தேநீர் வாங்கிக்கொண்டு வருவதற்காக சவேந்திர குமார் என்ற 7 வயது சிறுவன் தன்னுடைய அக்காவுடன் கடைக்குச் சென்றான். அப்போது, தெருவில் நின்றுக்கொண்டிருந்த தெருநாய்கள் கூட்டத்தில் சவேந்திர குமார் சிக்கிக்கொண்டான்.
இதைப் பார்த்த சகோதரி தம்பியை நாய்களிடமிருந்து மீட்க போராடினாள். ஆனால், சிறுவனால் தெருநாய்கள் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் போனது. வெறியோடு சிறுவனை தெருநாய்கள் சூழ்ந்துக்கொண்டு கடித்து குதறியது. இதைப் பார்த்த சகோதரி சத்தம் போட்டு கூச்சலிட்டாள்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், சிறுவன் சவேந்திர குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து, சவேந்திரகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தெருநாய்கள் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இத்தகவலை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.