இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, அமெரிக்கா ஆராய்வு!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், அமெரிக்காவின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமீபத்திய ‘டிட்வா’ இயற்கை அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட அவசர மனிதாபிமான உதவிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த அளிக்கப்பட பங்களிப்புகளை சுட்டிக்காட்டினார்.
கலந்துரையாடலின் போது, சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்கள் மற்றும் பிற பாரம்பரியமற்ற சவால்களை எதிர்கொள்ளும் பொது உறுதிப்பாட்டை இருதரப்பும் வலியுறுத்தின.
விரிவான கடல் பரப்புப் புரிதலை (Domain Awareness) உருவாக்குவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டது.
அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பலின் வருகை, இலங்கை கடற்படைக்கு (SLN) நாட்டின் கடல் எல்லைகளில் பாதுகாப்புச் சவால்களை சமாளிக்க விரிவான செயல்திறனை வழங்கும் முக்கியமான முன்னேற்றமாகக் குறிப்பிடப்பட்டது.
இரு தரப்பும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், கூட்டு பயிற்சிகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு முன்முயற்சிகள் மூலம் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் வழிகளையும் ஆராய்ந்தன.
அட்மிரல் Koehler, கடல் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய பொது இலக்குகளுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் பசுபிக் கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் Matthew ஹவுஸ் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





