காணாமல் ஆக்கப்பட்ட ஊடகருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!
“இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அநுர அரசே இதற்குப் பதில் சொல்!”
இவ்வாறு வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான சு.இராமச்சந்திரன், கடந்த 15.02.2007 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, துன்னாலை கலிகைச் சந்தி இராணுவ முகாமில் வைத்து இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார்.
இச்சம்பவம் இடம்பெற்று 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அவருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
பருத்தித்துறை பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், ஊடகவியலாளர் மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, இராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட விதம் தத்ரூபமாக ‘ஆற்றுகை’ செய்யப்பட்டு மக்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய புதிய அரசு இதற்கான பதிலை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது கோஷமிட்டனர்.
இப்போராட்டத்தில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.





