பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச ராஜபக்ச மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் பதவியை தற்போது வகிக்கின்றார்.
“ 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுவந்தது.
அடக்குமுறைக்காகவும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னரே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உருவாகியது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இருந்து அழுத்தங்கள் வந்தன.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சியின்போது 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
அதற்கமைய நாடாளுமன்றத்தில் (parliament) சமர்ப்பிக்கப்படட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றம் சென்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை உருவாக்க கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிவில் அமைப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், தேசிய மக்கள் சக்தியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
நல்லாட்சியில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது சட்டமானால் அரசியலமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்.
எனவே, மேற்படி சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்.” எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டு, அது சட்டமூலமாக வெளியாகி, முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





