இலங்கை சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணை தோல்வி
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 3 நாட்கள் விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில், சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தை ஏற்று அறிக்கையொன்றை வழங்கினார்.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அத்துடன், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி ஐக்கிய மக்கள் சக்தி இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருந்தன.