வசூல் வரணும் கோவிந்தா… கோவிந்தா… திருப்பதி மலை ஏறிய லியோ படக்குழு
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் ஆகி ஜெயிலர், ஜவான் வசூலையே முந்த வேண்டும் என்கிற வேண்டுதலுடன் படக்குழுவினர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இணை தயாரிப்பாளர் ஜகதீஷ் மற்றும் உதவி கதையாசிரியர் ரத்னகுமார் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே செல்லும் காட்சிகளை ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய கும்பலுடன் திருப்பதி மலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரத்னகுமார் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவிந்தா கோஷத்துடன் படக்குழுவினர் நடை பயணம் மேற்கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கமல்ஹாசன் படம் இதுவரை செய்யாத சாதனையை லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் செய்து மாஸ் காட்டியது. இந்நிலையில், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டி அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் வசூலையும் முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஜவான் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதிஷ் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.