தோல்வியின் பாதையில் THREADS – அதிர்ச்சியில் மார்க்
டுவிட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய மெட்டா நிறுவனத்தின் த்ரெட் (THREADS)செயலி தோல்வியின் பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்ததால், அதன் பயனாளர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்த எண்ணிய மார்க் ஜூகர்பெர்க், கடந்த ஜூலை 5 ஆம் தேதி சுமார் 100 நாடுகளில் த்ரெட் என்ற செயலியை களம் இறக்கினார்.
அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளே, சுமார் 5 கோடி பயனாளர்கள் த்ரெட் செயலியில் கணக்கு தொடங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.சுமார் ஒரு வாரத்திற்குள் இதன் எண்ணிக்கை 10 கோடியாக உயரும் வகையில், த்ரெட் செயலி ஜெட் வேகத்தில் பயணம் செய்தது.
ஆனால், 10 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டாலும், இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஜூலை மாதத்திலேயே சுமார் 20 லட்சம் பயனாளர்கள் மட்டுமே தொடர்ச்சியாக த்ரெட் செயலியை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது த்ரெட் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெறும் 5 லட்சமாக சுருங்கியுள்ளது. தனிநபர்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரபல நிறுவனங்கள் கூட த்ரெட் செயலியில் ஆக்டிவாக இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே, அசுர வேகத்தில் களம் இறங்கிய த்ரெட், அதே வேகத்தில் சரிவை நோக்கி செல்வதாக தெரிகிறது. இதன் மூலம், எலான் மஸ்கின் டிவிட்டர் முன்பு, மார்க்கின் த்ரெட் செயலி, நூலறுந்த பட்டம் ஆக ஆனதோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.