பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணிகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக பிள்ளையானினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு அழைக்கப்பட்டது.
இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் தனது கட்சிக்காரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது அவர் அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவைத் தொடர்வது குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வாவிடம், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை ஆலோசனைகளைப் பெறுவதற்காகச் சந்திப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியுமா என நீதியரசர்கள் குழாம் வினவியது.
அதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் அதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அத்தகைய வாய்ப்பினை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள மனுதாரரிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.





