இலங்கை–ஜேர்மனி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஜேர்மனிய
கூட்டாட்சி குடியரசுடன் இன்று புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
நிதி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 188 மில்லியன் யூரோ பெறுமதியான கடனை மறுசீரமைப்பதற்கான ஆவணங்களில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜேர்மனி சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (OCC) இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பெரும் உதவியாக அமையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் இக்கட்டான காலப்பகுதியில் ஜேர்மனி வழங்கி வரும் இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





