டிரம்பின் வரிகளுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடிகள் குறித்து தங்களுக்கிடையே இருக்கும் விரிசல்களைச் சரிசெய்ய பிரிக்ஸ் நாடுகள் சிரமப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக உலகின் கிட்டத்தப்பட்ட பாதி மக்கள்தொகையைக் கொண்ட, உலகப் பொருளியலில் 40% பங்கு வகிக்கும் நாடுகள் அமெரிக்க வரிவிதிப்தை எதிர்த்து ஒன்றாகக் குரல் கொடுக்கப்போவதாக தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பு நியாயமற்றது என்று அந்நாடுகள் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், அந்நாட்டை எதிர்க்கும் தரப்புகள் மட்டுமின்றி பங்காளி நாடுகளுக்கும் எதிராக வரிவிதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துவந்துள்ளார். அந்த வகையில், இம்மாதம் ஒன்பதாம் திகதி முதல் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற விவரங்களைக் கொண்ட கடிதங்களை டிரம்ப், வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் அறிக்கையை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 வளரும் நாடுகளின் அரசதந்திரிகள் வரைந்து வருகின்றனர். சந்திப்பில் இடம்பெறக்கூடிய அறிவிப்பு எதுவும் அமெரிக்காவையோ அதன் அதிபரையோ வெளிப்படையாகக் குறிப்பிடாது என்று எதிர்பாக்கப்படுகிறது. அதேவேளை, அறிவிப்பு வாஷிங்டனுக்கு எதிராக நேரடியாக விடுக்கப்படும் அரசியல் ரீதியான எதிர்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
“மிகவும் கவனமாகக் கருத்துகள் தெரியப்படுத்தப்படும் சந்திப்பாக இது அமையும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இறுதி அறிவிப்பில் அமெரிக்காவைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது சிரமம்,” என்று ரியொ டி ஜெனிரோவின் பொன்டிஃபிக்கல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பிரிக்ஸ் கொள்கை நிலைய இயக்குநர் மார்ட்டா ஃபெர்னாண்டஸ் தெரித்தார். குறிப்பாக வரிகளைக் குறைக்க அண்மையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சீனாவுக்கு இது பொருந்தும்.
பிரிக்ஸ் சந்திப்பில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார். 12 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் இச்சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை.
“ஸி கலந்துகொள்ளாததற்கான காரணங்கள் குறித்து வதந்திகள் நிலவும் என்பது என் எதிர்பார்ப்பு,” என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சீனாவுக்கான முன்னாள் இயக்குநர் ரயன் ஹாஸ் குறிப்பிட்டார்.