100 ஆண்டில் இல்லாத மோசமான சாதனை படைத்த இலங்கை அணி!
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று டர்பன் ஆடுகளத்தில் தொடங்கி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தென்னாப்பிரிக்கா பவுலர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 42 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுமோசமான ஒரு இன்னிங்ஸை பதிவுசெய்தது.
இந்த மோசமான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி 100 ஆண்டில் இல்லாத ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளரான மார்கோ யான்சன் 6.5 ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மார்கோ யான்சனின் தலைசிறந்த பந்துவீச்சால் 42 ரன்னுக்கு இலங்கை அணி சுருண்டது.
இதன்மூலம் கடந்த 100 ஆண்டில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மிகைக்குறைவான பந்தில் ஆல் அவுட்டான முதல் அணி என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.
இலங்கை அணி வெறும் 83 பந்துகளை (13.5 ஓவர்கள்) மட்டுமே விளையாடி ஆல் அவுட்டானது. இது கடந்த 100 ஆண்டில் பதிவான முதல் மோசமான இன்னிங்ஸாக மாறியது.
இதற்கு முன் 1924-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் வெறும் 75 பந்துகளில் (12.3 ஓவர்கள்) மட்டுமே விளையாடி தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.