ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனிச்சுவர்; ஒருவர் மரணம், குகைக்குள் சிக்கிய இருவர்!
ஐஸ்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளைக் கண்டு ரசிக்க ஆகஸ்ட் 25ஆம் திகதியன்று சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் 25 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர்.அப்போது பனிச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பனிக்குகைக்குள் இருவர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
மற்ற சுற்றுப்பயணிகள் காயமின்றி தப்பினர்.அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் பனிக்குகைக்குள் சிக்கியோரைத் தேடி மீட்கும் பணிகள் ஆகஸ்ட் 25ஆம் திகதி இரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
கடும் இருளில் தேடுதல், மீட்புப் பணியை நடத்துவது மிகவும் சிரமமானது, ஆபத்தாமனதும்கூட என்று அதிகாரிகள் கூறினர்.விடிந்ததும் தேடுதல், மீட்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறைந்தது 150 பேர் தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் 12 பேரைக் கொண்ட குழுக்களாக அவர்கள் மாறி மாறிச் செயல்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.