ஈரான் அதிபரின் மரணத்தில் தொடரும் மர்மம்? மொசாட்டிற்கு தொடர்பு? பகிர் கிளப்பும் அமெரிக்கா
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அஜர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஏழு பயணிகளுடன் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரிகளில் ஒருவரான வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து முழுவதும் கருகிய நிலையில் அதில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டு அதில் இருந்த அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன. ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மரணம்! இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கு தொடர்பு?
இந்த தருணத்தில் ஈரான் ஜனாதிபதியின் (Ebrahim Rais) மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம்; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி (Ebrahim Rais) ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கடந்த மாதம் சிரியாவில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் ரைசியின் (Ebrahim Rais) மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே உலக நாடுகளின் சந்தேக திரும்பியுள்ள நிலையில், ஈரான் அதிபர் ரைசி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீரும் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒருமாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரைசியின் எதிரிகள்?
இவை ஒருப்புறம் இருக்க இப்ராகிம் ரைசிக்கு ஈரானிலேயே எதிரிகளின் நீண்ட பட்டியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலரே எதிரிகளாக இருப்பதாகவும், அவர்களிடமிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், உள்நாட்டு எதிரிகளே அவரைக் கொல்வதற்கு முயற்சித்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
மேலும், 1988-ல் ஆயிரக்கணக்கானோரின் மரண தண்டனைகளை மேற்பார்வையிடும் ஈரானின் உச்ச தலைவரின் கடினப் பாதுகாவலராக இப்ராகிம் ரைசி இருந்ததாகவும், அதனாலேயே அவர், ’தெஹ்ரானின் கசாப்புக்கடைக்காரர்’ என அழைக்கப்பட்டதாகவும், இதனாலேயே அவருக்கு எதிரிகள் அதிகமானதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் – ரஷ்ய உறவு
மேலும் உலகளாவிய ரீதியில் மிகவும் பலம்வாய்ந்த கூலிப்படையான வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்கேனி பிரிகோசின் உலங்கு வானூர்தி சென்ற வேளையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் திட்டமிட்ட வகையில் அவரை கொலை செய்ததாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்னர் படை போரிட்டு எதிரணிக்கு பல இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தமது படையணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என புட்டினுக்கும் வாக்னருக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்திருந்தது. இதன் காரணமாக புட்டின் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் வாக்னர் படை, அதிரடியாக ரஷ்யாவுக்குள் இறங்கி போர் மூண்டது.
எனினும் சமாதானமாக பேசிய புட்டின், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் தனது நட்பு நாடாக பெலாஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சில வாரங்களில் உலங்கு வானூர்தியில் பயணித்த வாக்னர் படையின் தலைவர் உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் மர்மம் நீடித்து வரும் நிலையில், அதே பாணியில் ஈரானிய ஜனாதிபதி இன்று உயிரிழந்துள்ளார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயல் தலைவர் முகமது மொக்பருடன் பேசியதாக, தெரிவிக்கப்படுகிறது.
கிரெம்ளின் தொலைபேசி அழைப்பை உறுதிப்படுத்தியது மற்றும் இரு தரப்பினரும் “ரஷ்ய-ஈரானிய தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பரஸ்பர நோக்கத்தை” வலியுறுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
2022 இல் மாஸ்கோ உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஈரான் ரஷ்யாவின் முக்கியமான இராணுவ நட்பு நாடாக இருந்து வருகிறது .
முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானதையடுத்து, புடின் இரங்கல் தெரிவித்தார். அவர் ரைசியை “ரஷ்யாவின் உண்மையான நண்பர்” என்றும் “சிறந்த அரசியல்வாதி” என்றும் விவரித்தார் என்பது குறிப்பிடத்தககது.