பலம் வாய்ந்த தொழிலதிபரிடம் 100 மில்லியன் கேட்டார் மைத்திரி – மஹிந்த தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் நீதித்துறையை அவமதித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறுகிறார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் இந்நாட்டின் முக்கிய வர்த்தகர் ஒருவரை மைத்திரிபால சிறிசேன சந்தித்து தனது வேட்புமனுவுக்கு நூறு மில்லியன் வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் வினவிய போது அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, அவரது பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பயன்படுத்தப்படுவது எவ்வளவு நியாயமற்றது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.