மீண்டும் பேசுபொருளான அமெரிக்க – ஈரான் போர்நிறுத்தத் திட்டங்கள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் தொடர்பான புதிய கட்டமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
எனினும், இதுபோன்ற சமாதான முயற்சிகள் முன்னரும் பலமுறை தோல்வியடைந்துள்ளன.
மார்ச் 24 ஆம் திகதி அன்று, பாகிஸ்தான் இடைத்தரகராக செயல்பட்ட நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் திட்டம் ஒன்றை அனுப்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில், ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்களை அழிக்க வேண்டும், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும், ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, அமெரிக்கா தடைகளை தளர்த்த தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தை ஈரான் ஆரம்பத்தில் “அளவுக்கு மீறியது” என்று நிராகரித்தது. பின்னர், போரை முடிவுக்குக் கொண்டுவர ஐந்து நிபந்தனைகளை முன்வைத்தது. அதில், இழப்பீடு வழங்குதல் மற்றும் மீண்டும் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வழங்குதல் போன்றவை அடங்கும்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 31 அன்று பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து ஐந்து அம்சங்களைக் கொண்ட மற்றொரு அமைதித் திட்டத்தை முன்வைத்தன.
இதனிடையே, பேச்சுவார்த்தைகள் “மிகவும் சிறப்பாக” நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாலும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ளது.
ஏப்ரல் 02 ஆம் திகதி அன்று ட்ரம்ப் மீண்டும் போர்நிறுத்தம் குறித்து பேசியதாக கூறப்பட்ட நிலையில், அதனை ஈரான் “பொய்யானதும் ஆதாரமற்றதும்” என நிராகரித்துள்ளது.





