தென் கொரியாவில் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய பெண் – ஒருவர் பலி

தென் கொரியாவின் ஓசான் (Osan) நகரில், கரப்பான் பூச்சியை எரிக்க முயன்றபோது ஏற்பட்ட தீ விபத்தில், அயல் வீட்டில் வசித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்தில் இருந்து தப்ப முயன்றபோது ஜன்னல் வழியாக விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீ வைத்த இளம் பெண்ணுக்குக் கைதாணை பிறப்பிக்கப்படும் என்று தென் கொரியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண், எளிதில் தீப்பற்றக்கூடிய தெளிப்பான் (ஸ்ப்ரே) மற்றும் லைட்டரைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சியை எரிக்க முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் காவல்துறையிடம் தீ வைத்த பெண் தெரிவித்தார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர் சீனாவைச் சேர்ந்த பெண் எனத் தெரியவந்துள்ளது. அவர் அதே கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் தனது கணவர் மற்றும் இரண்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்தார் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீயினால் ஏற்பட்ட அடர்ந்த புகை காரணமாகப் படிக்கட்டுகள் வழியாக வெளியேற முடியாததால், ஜன்னல் வழியாக வெளியேற முயன்றபோது அவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது கணவர் பக்கத்துக் கட்டடத்திற்குத் தப்பிச் சென்ற நிலையில், குழந்தை காப்பாற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.