ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!
“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். மேலும் சில உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தை வைத்தாவது மக்களை வீதிக்கு களமிறக்க முடியுமா என யோசிக்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும் அவசரகால சட்டத்தை எமது அரசாங்கம் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது கிடையாது.
அத்தியாவசிய சேவையாளர் நாயகத்துக்கு தமது பணியை தடையின்றி முன்னெடுக்க வழிவகுக்கும் ஒரேயொரு நோக்கில்தான் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில்போன்று அரசியல் பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைக்காக அச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தவில்லை.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு முடியாத அரசாங்கமாக இருந்தால்தான் ஆட்சியை விட்டுவிட்டு ஓட வேண்டிவரும்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டுவருகின்றது. பொருளாதாரம் வீழ்ச்சியடைய நாம் இடமளிக்கவில்லை.
எனவே, பொருளாதாரம் விழும், இந்த அரசாங்கம் கவிழும் என எதிர்பார்ப்பவர்களுக்கு அவ்வாறு நடக்காது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.
அதேவேளை, இனவாதம் மற்றும் மதவாத்தை கையில் எடுத்து எமக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுத்தனர். ஆனால் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் நிரூபித்துள்ளோம். இன ஐக்கியம், ஒற்றுமை என்பதுதான் எமது முதன்மை நோக்கமாகும்.” என்றார்.





