பொறுப்பற்ற செய்தி வெளியீடு ஜனநாயக செயல்முறையையே பாதிக்கக்கூடும் – பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவின் ஊடகங்களில் வெளியாகும் தவறான மற்றும் தெளிவற்ற செய்திகளால்,
வேல்ஸ் வாக்காளர்கள் அரசியல் தகவல்களில் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்
என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த 3,000 க்கும் மேற்பட்ட செய்திகளில், இங்கிலாந்துக்கான கொள்கைகள் முழு பிரித்தானியாவுக்கும் பொருந்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், வேல்ஸில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்கள்
தவறான புரிதலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரசாங்கம்” போன்ற பொதுவான சொற்கள் பயன்படுத்தப்பட்டதால்,
எந்த நிர்வாகம் எந்தக் கொள்கைக்கு பொறுப்பு என்பது தெளிவாக தெரியாமல் போவதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, வாக்காளர்கள் சரியான தகவலின்றி தேர்தலை எதிர்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
கருத்துக் கணிப்பின் படி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகள் வேல்ஸ் அரசின் கீழ் இருப்பதை மூன்றில் ஒருவர் கூட அறியவில்லை.
அதேபோன்று, மே மாத செனட் தேர்தல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களை 7% பேர் மட்டுமே அறிந்திருந்தனர்.
இந்த நிலையில், ஊடகங்களின் பொறுப்பற்ற செய்தி வெளியீடு ஜனநாயக செயல்முறையையே
பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





