வவுனியா மாணவி படுகொலை சம்பவம் – 10 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் குடும்பம்
வவுனியாவில் 16 வயது மாணவியான ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில்
தனிமையிலிருந்த போது அந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
எனினும் ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்வதாக தெரிவித்த உறவினர்கள்
குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லையென்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு பத்து வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம் .
ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர் . ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம்.
இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .





