வரிகளின் பெரும் பகுதியை 90 நாட்களுக்கு குறைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புதல்

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றின் மேல் மற்றொன்று விதித்த இறக்குமதி வரிகளை இப்போதைக்குப் பெரிய அளவில் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் மூலம் உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களான அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன் நிதிச் சந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின.
அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கிடையே ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விதித்த வரிகளின் பெரும்பகுதியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். வரிக் கட்டணங்கள் 100% மேல் குறைந்து 10% இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இரு நாடுகளும் தங்களின் தேசிய அக்கறைகளை நன்கு வெளிப்படுத்தின,” என்றார் பெசன்ட். “இரு தரப்புக்கும் சமமான வர்த்தகத்தில் அக்கறை உள்ளது. அந்தப் பாதையில் அமெரிக்கா தொடர்ந்து செல்லும்,” என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியருடன் பெசன்ட் பேசினார். கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் நல்ல முன்னேற்றம் கண்டதாக அமெரிக்காவும் சீனாவும் தெரிவித்தன.
ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்பு, டோனல்ட் டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று உலக நாடுகள் மீது வரிவிதித்து பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்த முதல் நேரடி சந்திப்பாகும். டிரம்ப்பின் அரசாங்கம் குறிப்பாக சீனா மீது அதிக வரிவிதித்திருந்தது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 145% வரிவிதித்தது.
அதற்கு பதில் நடவடிக்கையாக அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான வரி விகிதத்தை சீனா 125% உயர்த்தியது.
இரு நாடுகளின் நடவடிக்கைகளும் அவற்றுக்கு இடையிலான கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை சீர்குலைந்துபோகும் நிலைக்குத் தள்ளியது. விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டன, சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.