ஈராக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீளப் பெற்றுக்கொள்ள துருக்கி இணக்கம்!
சிரிய முகாம்களில் இருந்து ஈராக்கிற்கு மாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய அரசு கைதிகளை மீள பெற்றுக்கொள்ள துருக்கி முன்வந்துள்ளது.
ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் (Fuad Hussein) இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஈராக் தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்புவது குறித்து மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிரிய அரசு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக சந்தேக நபர்களை அடைத்து வைத்திருந்த முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளை மூடியுள்ளது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஈராக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்களை அதன் சொந்த சட்ட அமைப்பில் விசாரிப்பதாக பாக்தாத் கூறியுள்ளது. இருப்பினும் கைதிகளை அழைத்து செல்ல முன்வருமாறு பிற நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





