சர்வதேச சந்தையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை!!

ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் இருந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கவர்ச்சிகரமாக உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5000 அமெரிக்க டொலர்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
பலவீனமான டொலர், வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், பத்திர விளைச்சல் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த உயர்வு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக இந்த மாதத்தில் மாத்திரம் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர், மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் பிரச்சினை, இந்தியா மீதான வரி விதிப்பு, மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்தமை என உலக பொருளாதார நிலவரங்கள் பெறுமதிமிக்க உலோகங்களின் விலை உயர்விற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4000 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதனால் உலகளாவிய பங்குகளும் சரிந்துள்ளன.
இந்த திடீர் சரிவு நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரத்தில் 60,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. பெரும்பாலானோர் ஆபரண நகைகளாக கொள்வனவு செய்வதை பார்கிலும் தற்போது தங்க நாணயங்களாக கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.