மறதி நோய் அறிகுறிகளும்… வராமல் தடுக்க செய்ய வேண்டியதும்
டிமென்ஷியா அல்லது மறதி நோய் என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நரம்பு செல்களின் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய்.
இதனால் நினைவாற்றல் பலவீனமடைகிறது, சிந்திக்கும் திறன் குறைகிறது. தினசரி செயல்பாடுகளை செய்யும் திறனை கூட இது பாதிக்கும்.
டிமென்ஷியா பொதுவாக வயதானவர்களை தாக்கும் நோயாகக் கருதப்படுகிறது, இருப்பினும், இன்ரைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, இந்த நோய் 50 வயதில் கூட வருவதற்கான ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஆபத்து காரணிகளால், 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு மறதி நோய் ஏற்படலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் அதிர்ச்சியளிக்கிறது. நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மனநல மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான ஆபத்து, சராசரியாக 65 முதல் 75 வயது முதல் தொடங்கலாம் என்றும் ஆண்களில் 55 வயது முதல் 75 வயதிற்குள் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. செவிவழி செயலாக்கம், காட்சி உணர்தல், உணர்ச்சி செயலாக்கம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மறதி நோய் குறித்த ஆய்வில் 34,425 பேர் பங்கேற்ற நிலையில், மூளை மற்றும் வயிற்று பகுதி ஸ்கேன் செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில், அதிக வயிற்று கொழுப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு திசுக்களைக் கொண்ட ஆண்களும் பெண்களுக்கும், மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, உடல் பருமன் மற்றும் இதய நோய் காரணமாக, மூளையின் அளவு படிப்படியாக குறைகிறது எனவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
மறதி நோய் வராமல் தடுக்க, இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைப்பது அவசியம் என ஆய்வு வலியுறுத்துகிறது. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற எளிய ஏரோபிக் பயிற்சிகள் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. மூளையில் உள்ள டாக்ஸின்களை போக்கி சுத்தப்படுத்துகிறது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது கூட மறதி நோயை தடுக்க உதவும். இசைக்கருவி அல்லது புதிய மொழி அல்லது உங்களை உற்சாகப்படுத்தும் எதையாவது கற்றுக்கொள்ளவது பலன் அளிக்கும்.
டிமென்ஷியா நோய்க்கான அறிகுறிகள்:
1. நினைவாற்றல் இழப்பு.
2. சிந்திக்கும் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறன் குறைதல்.
2. வார்த்தைகள் வராமல் தடுமாறுதல்.
3. பேச்சுத் திறன் குறைதல்.
4. மனநிலை மாற்றங்கள்.
5. நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்.
6. தினசரி செயல்பாடுகளை செய்யும் திறன் குறைதல்.