டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) இணைந்து குடிநீர், சுகாதாரம், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலைமையறிக்கை, அவசர தேவைகள் மதிப்பீடு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவும் சுவிற்சர்லாந்து நாட்டின் இந்த அதிவேக பதிலளிப்பு குழு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (SDC) மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.