இலங்கையில் வேகமாக பரவிவரும் ரேபிஸ் நோய் : பூனை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் பூனைகள் மூலம் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள் தெருநாய்களால் அல்ல, மாறாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால் ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய், நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் பரவக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடித்தல் அதிகரித்துள்ளது என்றும், பூனைகளின் கீறல்கள் கூட கடித்தது போலவே ஆபத்தானவை என்றும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, விலங்குகள் கடித்தால் அல்லது கீறப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும், செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.




