நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிப்பு
நேபாளத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் மாதேஷ் மாகாணத்தின் கவுர் நகராட்சிக்கு உட்பட்ட சவ்கதா பகுதியில், சமீபத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் , இரண்டு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இது, மோதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து கல்வீச்சு, வீதியோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன், தீக்கிரையாக்கினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து, பொலிஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதில், இரண்டு பொலிஸார் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
எனினும், அப்பகுதியில் மேலும் கலவரம் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் அங்குள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.




