வேலை வாய்ப்பு எனும் போர்வையில் கொழும்பில் பல மில்லியன் மோசடி
அல்பேனியா மற்றும் கனடாவில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, ரூ. 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
அந்தப் பெண், மஹரகமவில் “குளோபல் எடுகேர் கன்சல்டன்சி” என்ற பெயரில், மாணவர் விசா சேவை வழங்குபவர் போல் நடித்து, வெளிநாட்டு வேலைகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து தனிநபர்களிடமிருந்து பணத்தை வசூலித்து வந்துள்ளார்.
பெறப்பட்ட முறைப்பாடுளின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரை அவர் ஏமாற்றியதன் மூலம் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ. 10 மில்லியனுக்கும் அதிகமாகும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரியான உரிமம் இன்றி இயங்கி வந்த அந்த வளாகத்தில், பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தி, போலியான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர் நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வியாழக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜப்பானில் வேலைகள் வழங்குவதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மற்றொரு நடவடிக்கையாக, மீரிகமவில் “ASPA” என்ற பெயரில் இயங்கி வந்த ஓர் நிறுவனத்தில் SLBFE புலனாய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையில் ஒரு இரகசிய அதிகாரி ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக, மினுவாங்கொடவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஜா எலவைச் சேர்ந்த ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனர்.




