ரமழான் தொழுகை – கடுமையான நுழைவு கட்டுப்பாடுகள் : 10,000 பலஸ்தீனியர்களுக்கு நுழைவு தடை
ரமழானின் முதல் வெள்ளிக்கிழமை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குப் பலஸ்தீனியர்கள் நுழைவதை இஸ்ரேல் கடுமையாகத் தடைசெய்துள்ளது.
ரமல்லாவிற்கு அருகிலுள்ள கலந்தியா சோதனைச் சாவடி முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று, உள்ளே செல்ல காத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனாலும் மேற்குக் கரையிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வளாகத்தில் செல்லமுடியும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், தெரிவித்தனர்.
அனுமதிக்கபட்டவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் என கூறப்படுகிறது.
மேற்குக் கரையையும் கிழக்கு ஜெருசலேமையும் பிரிக்கும் சோதனைச் சாவடிகளில் இஸ்ரேலிய இராணுவம் உயர் எச்சரிக்கை நிலையில் இருந்தபோதிலும், காலை நேரத்தில் சுமார் 2,000 பலஸ்தீனியர்களே கலந்தியா சாவடி வழியாக ஜெருசலேம் நோக்கிச் செல்ல முடிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.





