சிங்கமலை வனப்பகுதியில் சிக்கி தவித்த வெளிநாட்டுப் பெண் மீட்பு
ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரை ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு வெற்றிகரமாக மீட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் (Amsterdam) சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த பெண் கடந்த 05 ஆம் திகதி தனது சில நண்பர்களுடன் சிங்கமலை வனப்பகுதியில் ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.

குறித்த வெளிநாட்டுப் பெண் நேற்று (06) காலையில் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய மலை உச்சிக்குச் சென்றிருந்த போது அவரால் கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
பின்னர் இது குறித்து ஹட்டனில் உள்ள பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர், சிங்கமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று குறித்த வெளிநாட்டுப் பெண்ணை மீட்டுள்ளனர்.






