ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் இன்று (17) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது உயிரிழந்த சிறுமியின் சகோதரர் வழக்கின் இரண்டாவது சாட்சியாளராக சாட்சியமளித்தார்.
சிறுமியை கொடுமைப்படுத்துதல், வீட்டுப் பணியில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பதியுதீன் அப்துல் ரிஷாட் ஆகியோரை விடுவிக்குமாறு கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், சிறுமியை பணிக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் நபர் , ரிஷாட் பதியுதீனின் மாமனார் மற்றும் அவரது மனைவி ஆகிய மூவருக்கு எதிராகவே தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற 15 வயது சிறுமி, கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த 2021 ஜூலை 03 ஆம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளானார்.
பின்னர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஜூலை 15 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பின்னர் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




