புதையலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் ‘மை’ வைத்துப் பார்க்கும் மந்திரவாதியா?
மட்டக்களப்பு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தவை பிறப்பித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரவு, மண்முனையில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை, கட்டுகஸ்தோட்டை, இங்கிரியாகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் பூசைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி “இந்தச் சிறுவன் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையாகப் பிறந்த முதல் ஆண்பிள்ளை என்றும், ஜாதகப்படி மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த வேளையில் பிறந்தவர் என்றும், இவரைப் பலிகொடுத்துப் புதையல் எடுக்கவே கடத்தி வரப்பட்டுள்ளார்” என்றும் வாதிட்டுள்ளார்.
எனினும், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, இச்சிறுவன் ‘மை’ போட்டுப் பார்த்துப் புதையல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் ‘மந்திரவாதி’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், சிறுவனின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறும், ஏனையோரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற மண்முனைப் பிரதேசம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் குலத்தைச் சேர்ந்த நாச்சியார் என்பவரால் ஆளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.
இப்பகுதியில் வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுவதால், தமிழ் மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட முறையில் இவ்வாறான புதையல் அகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





