இனி சரணடைய மாட்டேன்! டிரம்ப் – எலான் மஸ்க் டுவீட்
தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவுக்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்துள்ளார், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக ட்ரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செயப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில், 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, ட்ரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து வருகிற 25ஆம் திகதி இன்றைய நாளுக்குள் தாங்களாக முன்வந்து ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த அவருக்கு, சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.
அதன்படி, ட்ரம்பின் உயரம் ஆறு அடி மூன்று அங்குலம் (1.9 மீட்டர்), அவரது எடை 215 பவுண்டுகள் (97 கிலோகிராம்) மற்றும் அவரது முடி நிறம் “ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி” என சிறைச்சாலையால் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரது உடல் அடையாளங்கள், கைரேகை மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தான் பொதுவாக மக்ஷாட் (Mugshot) என்று அழைக்கப்படுகிறது.
இதற்காக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அட்லாண்டாவின் ஃபுல்டன் கவுண்டி சிறையில் இருந்த ட்ரம்ப் மீது, 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டொலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது X தள பக்கத்தில், Mugshot-ன் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, “தேர்தல் குறுக்கீடு! ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்து, அடுத்த லெவல் ( Next-level) என்று குறிப்பிட்டுள்ளார்.
Next-level https://t.co/E81JKWTJPS
— Elon Musk (@elonmusk) August 25, 2023