கடைசி குண்டு தீரும்வரை போராடுவோம்: ஈரான் பிரதி அமைச்சர் டெல்லியில் கருத்து!
“கடைசி குண்டு தீரும்வரை, கடைசி வீரர் இருக்கும்வரை ஈரான் போராடும். அதைவிட வேறு வழியில்லை.” என்று ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கத்தீப்சாதே Saeed Khatibzadeh தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
“ அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த மேற்படி நாடுகள் முயற்சிக்கின்றன.
எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.
எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய தரப்புடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “ஆம். இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன்.
மற்றவர்களுடனும் சிறிய உரையாடலை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் முக்கியமானது என்னவென்றால், அனைவரும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் அதே வேளையில், சர்வதேச சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துவது என்பது கூடாது.
துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த கொடூரங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
அமெரிக்கர்கள் மற்றொரு நாட்டின் தலைவரை கொலை செய்துள்ளனர். இது ஒரு புதிய வழக்கமாக மாறினால், உலகில் எந்த நாடும் மற்ற நாடுகளுடன் இயல்பான தூதரக உறவுகளை பேண முடியாது.” எனவும் சுட்டிக்காட்டினார்.





