205 விமான சேவைகள் இரத்து
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக இதுவரை 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும் புறப்படவிருந்த 98 விமானங்களுமாக மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விசா நீட்டிப்பு முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும்
தற்போது அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் விசா வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அவ்விமானப் பயணங்களை மீளமைப்பதற்கு முழுமையான விமான டிக்கெட்டுகளையும் இரத்து செய்ய வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி இரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப வழங்கவும் வேறு விமானப் பயணத்திற்கு மாற்றுவதற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தை தவிர்த்து மாற்று வழிகள் ஊடாக ஐரோப்பாவிற்கான விமான சேவைகள் பயணத்தை
ஆரம்பித்துள்ளதால் இதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதனால் நிலைமை சீரடையும் வரை விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொதிகளை மட்டுப்படுத்த வேண்டி வரும் எனவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக மேலும் தெரிவித்தார்.




