டயஸ்போராக்களின் அழுத்தத்துக்கு அடிபணிவாரா நாமல்?
“டயஸ்போராக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்பதற்காக சும்மா இருந்துவிடப்போவதில்லை. கட்டாயம் லண்டன் செல்லுமாறு நாமலிடம் கூறியுள்ளோம்.
பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவர் முடிவை எடுப்பார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், நாடாளுமன்ற உறுப்பிர் நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த தஸ்ஸ குட்டியாராச்சி கூறியவை வருமாறு,
“நாமல் ராஜபக்சவுக்கு உலகில் அனைத்து இடங்களில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுவருகின்றது. எனினும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அவரது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உள்ளது.
டயஸ்போராக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்பதற்காக நாம் விட்டுவிடக்கூடாது. எனவே, எப்படியாவது மேற்படி பயணத்தை மேற்கொள்ளுமாறு நான் நாமல் ராஜபக்சவிடம் கூறியுள்ளேன்.
நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயல்படுகின்றது.
எனவே, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டு நாமல் ராஜபக்ச சிறப்பான முடிவை எடுப்பார்.” – என்றார்.





